Monday, March 4, 2013ராணியின் கதை


ஆங்கில மூலம்: ரோமா டியேர்ன்
http://romatearne.blogspot.co.uk


அந்த முகவரியை இலகுவாக கண்டுபிடிக்க முடிய வில்லை. நான் தாமதமாக வந்திருந்தேன். மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்.

பிறகு, ஒரு தற்சமைய முடிவில் வாங்கிய மலர்கொத்தைக் அவர் கையில் தந்தேன்.

அது ஒரு விபரணம் இல்லாத பெப்ருவரி நாள்.  சூரிய வெளிச்சத்தை காணவில்லை.  ஈரமான காற்று மழைவருமென பயமுறுத்தியது. இந்தப் பேட்டிக்காக லண்டன்வரை பயணித்துவிட்டு, ரயில் நிலையக் கடையில் அந்தப் பதுமராக மலர்கொத்தை வேண்டியிருந்தேன்.

நான் பேட்டிகாணபவிருப்பர் ராணி. இருபத்தியாறு வயது. எனது புர்வீகம் கூட இலங்கையாக இருப்பதால் இந்த பேட்டியில் அதிக கவனம் வந்திருந்தது. ஆனாலும் இந்தப் பேட்டியை மேற்கொள்வதில் நிறைய யோசித்திருந்தேன்.

நான் ஒரு பத்திரிகையாளனல்ல. ஒரு ஆலோசகனோ, சட்டத்தரணியோ, வைத்தியனோ கூட அல்ல. இப்படியான ஒரு நபரைச் சந்திப்பதில் எந்தவிதமான அனுபவமும் எனக்கில்லை.

ஆகவே ஒரு நிச்சயமற்ற பரிசுப்பொருளாக, மதிப்பளிக்கும் நிலைப்பாட்டாக மலர்கொத்தை வாங்கியிருந்தேன்; வானத்தின் நீல நிறத்துடன், சிறுமைகளைத் தொலைத்துவிட்ட காற்றின் நறுமணத்துடன்.

இந்த மலர்க்கொத்தை நீட்டியபோது ஒரு பாழடைந்த சோகம் மட்டும் அவர் முகத்தில் குடியிருந்தது. சுற்றுப்புறங்களிலின் செல்வாக்கினின்று அவர் மிகவே விடுபட்டிருந்தார்.

அவரைச் சந்தித்த அறை மிகச்சிறியதாக இருந்தது. ஒரு பதிவான படுக்கை, வெறுமை யான மேசை, ஓடாத கணணி, தாவரங்களின்றி, சுவர்களில் படங்களின்றி, தனதென்று சொல்லிக்கொள்ள எதுவுமற்ற வெறுமை.

Roma Tearne
சுவரில் பதித்திருந்த ரேடியேட்டரில் இரண்டு சாம்பல் நிறக் காலுறைகள் காயந்து கொண்டிருந்தன. சற்று மெலிதான ஊதுபத்தி வாசைன காலையில் பிரார்த்தனைகள் நடந்ததை வெளிக்காட்டின. கதவுத் திரையின் மறைவுகளில் எங்கள் சம்பாசனையை ஒட்டுக்கேட்கக் காத்திருப்பவர்களின் சிலும்பல்கள் போலும்.

“சொல்லுங்கள்” - நான் வினவினேன். மற்ற எண்ணங்களை முற்றாக மறைத்துவிட்டு, நான் எங்கே இருக்கிறேன் என்பதையும் மறந்துவிட்டு.

“முதலிலிருந்து சொல்லுங்கள்”

ஆனால் அவரால் முடியவில்லை. அவரது நினைவுகள் துண்டு துண்டாகத்தான் வருவது போலும். வரவிரும்பாத நினைவலைகளை வெளியே சொல்லும்போது மட்டும் திரும்பத் திரும்ப வாழ்வதுபோல.

“அவர்களைக் கொன்றுவிட்டார்கள்”
- நான் ராணியின் விளக்கத்திற்காக காத்திருந்தேன்.

முதலில் ஆறுபேராக இருந்த குடும்பம். தற்போது ராணி மட்டும்தான். தனியாக.

“ஒன்பதாவது நாள், ஏழாம் மாதம், கடந்த வருடம்” - ராணி சொல்கிறார், கண்களை மூடியபடி, கரங்களை குறுக்கே கட்டி தனது தனிமையைப் பாதுகாத்தபடி.

“எனது சின்னம்மாதான் தொலைபேசி மூலம் அறிவித்தார். எமது வீட்டை கொளுத்தி விட்டார்கள் என்றார். எனது அம்மாவையும் தங்கச்சியையும் வீட்டுக்குள்ளே வைத்து உயிரோடு எரித்து விட்டார்கள். நான் போய்ப் பார்த்தபோது எலும்புக்கூடுகள் மட்டும் தான் எஞ்சியிருந்தன.”

ராணியின் வார்த்தைகள் எம்மிடையே ஒரு அதிர்வான அமைதிபோல பரவியிருந்தது. அவரது மனதில் உறுத்திக்கொண்டிருந்த முதல் நினைவு இதுதான் போலும்.

வெளியே லண்டன் தெருக்களில் ஒரு போலீஸ் வண்டி ஊளையிட்டுச் சென்று கொண்டிருந்து பின்னர் அச்சத்தம் மறைந்து விட்டது.

ராணியின் கதை 2004ம் ஆண்டு தொடங்குகிறது. அவருக்குப் பதினேழு வயதில். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்துள்ள ராணி எதிர்காலத்தில் ஒரு ஆசிரியராக வந்து தமிழ் குழந்தைகளை அறிவாற்றலை வளர்க்க விரும்புகிறார். நான்கு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தின் மூத்தவர்தான் ராணி.

குடும்பத்தின் அனைவரும் சிறிலங்கா ராணுவத்தின் அடக்குமுறை விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்கள். கிராமங்களை வளைத்துப் பிடித்து கிராமத்தவர்களை விசாரித்து கொடுமைபடுத்தும் இராணுவம் அழைத்துச்சென்று மீண்டும் திரும்பாத அனேக நண்பர்களை ராணிக்குத் தெரியும்.

ஆனால் 2004ம் ஆண்டு மற்றச் சிறுவர், சிறுமிகளைப்போல நிரம்பி வழியும் எதிர்காலக் கனவுகளுடன் வாழ்ந்தவர்தான் ராணி.

ஒருநாள் இயக்த்திற்கென ஆட் சேர்க்கும் ஒருவர் வீட்டுக்கு வந்து கதைத்துக் கொண்டிருந்த வேளையில், ஏதோ ஒரு உத்வேகத்தில் தானும் உதவி செய்ய போவதாக ராணி தெரிவிக்க அன்றுடன் வாழ்க்கை திசை திரும்பியது.

இயக்கத்திற்கென உளவு பார்க்கும் பணியில் ராணி நியமிக்கப்பட்டார். ஆனால் அது என்னவென்றே ராணிக்கு விளங்கியிருக்கவில்லை. ஒரு அரசுசாரா நிறுவனத்தில் தான் அவருக்கு நாளாந்த வேலை. கிராமம் கிராமமாகச் சென்று சுகாதார மேம்பாட்டுப் பணிகளில் இயக்க வைத்தியர்களுடன் சேர்ந்து வேலை செய்த அதே வேளை ராணி ஏ-லெவல் பரீட்சையிலும் தேர்வானார்.

2007 ஆண்டு போர்க்காலம் கடினமாகியது. வீட்டிற்கொரு வீரரென இயக்கம் ஆட்சேர்த்துக் கொண்டிருந்தது; சிறுவர்கள் உட்பட.

“உங்களது தம்பிகளும் இயகத்தில் சேர்க்கப்பட்டார்கள் என எப்போது தெரிந்தது?”
- நான் கேட்டேன்.

அந்தக் கேள்வியில் ராணி உடைந்து போனார். தலையைப் திடீரென பின்படுக்கையில் சரித்துக்கொண்டு விம்மி வெடித்தார். அது அழுகையென்று கூறமுடியாது. எனது நாடிகளை ஊடறுத்துச்சென்ற ஒரு வெறித் தனமான உணர்வு வெளிப்பாடு. அந்தப் பேரழுகை தொடர்ந்து கொண்டே போனது.

ஒன்றும் இயலாதவளாக நான் காத்திருந்தேன், புயல் ஓய்வதற்காக.

தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு ராணி தொடர்ந்தார்.

ஆதரவுக்காக கைகளைப் கோர்த்துக்கொண்டு இயக்கத்தை நோக்கிச்சென்ற ராணியின் இரண்டு தம்பிகளுக்கும் இன்றுவரை என்ன நடந்ததென்று யாருக்கும் தெரியாது.

2008ம் ஆண்டுப் போர் வடகிழக்கு இலங்கையை விட்டு தூரச் சென்றுவிட ராணியின் இயக்கதிற்கான தொடர்பும் துண்டிக்கப்பட்டது. குடும்பத்தை காப்பாற்றவென ராணி தையல் வேலை மற்றும் கேக் செய்தல் தொழில்களை கற்றுக்கொண்டார்.

ஆனாலும் இராணுவத்தின் கிராம வளைப்புகள், விசாரணைக் கொடுமைகள் தொடர்ந்தன. ராணியின் இயக்கத் தொடர்புகள் வெளியே தெரியவந்து விடுமோவென பயந்த அவரது பெற்றோர்கள் அவரை இன்னமொரு தொலைதூர கிராமத்துக்கு சொந்தங்களுடன் இருக்கவென அனுப்பி வைத்தனர்.

நாட்கள் கடந்து போரும் முடிவுக்கு வர, பெற்றோரை பிரிந்திருந்த ராணி ஏப்ரல் 2011ம் ஆண்டு பிறந்த ஊருக்குத் திரும்பினார். ஆனால் திரும்பிய சில நாட்களிலேயே சிறிலங்கா உளவுத்துறையால் ராணி கைது செய்யப்பட்டார்.  10 நாட்கள் சிறைவாசம்.

“என்னை அந்த பத்து நாட்களில் ரொம்பத்தான் கொடுமைப்படுத்தினார்கள்” - ராணி ரகசியம் பேசுவது போல் கூறுகின்றார். அவருக்கென கொண்டுவரப்பட்ட கோப்பி தொடுவாரின்றி ஆறிக்கிடக்கின்றது.

நான் கேள்வி கேட்பதை மறந்து மௌனமாகி யிருக்கின்றேன், வரப்போகின்ற பதில்களை எதிர்கொள்ளப் பயந்து.

ராணியை சிறிலங்கா உளவுத் துறையினர்  தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தினார்கள். அவர் கற்பழிக்கபட்டார், பல தடவைகள். அவரது கால் பெருவிரல் வெட்டப்பட்டது.

“எனது மனதை கொடுமைப்படுத்தி விட்டார்கள்”
-ராணி தன் உடலை குறுகிப்படுத்திக்கொண்டு அழுகிறார்.

ஒரு பாராளுமன்ற உறுபபினரின் உதவியுடன் ராணி விடுதலை செய்யப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுகிறார்.

ஒரு மாதகாலமாக, குழந்தையைப் போல் தாயாரின் மடியின் பாதுகாப்பில் படுத்திருந்தது மட்டும் ராணிக்கு இன்னும் நினை விருக்கின்றது. இதை நினைவுறுத்தும்போது ராணியும் ஒரு தாலாட்டுப்போல கண்களை மூடிக்கொண்டு முன்னும் பின்னும் அசைகிறார். நான் வெளியே பார்க்கின்றேன். பெப்ருவரி மாத வெளிச்சம் கொஞ்சமாகத்தான் உள்ளே வருகின்றது. வார்த்தைகள் என்னை தோற்கடிக்கின்றன.

கடைசியாக ஒரு உடைந்த மனிதையாக ராணி வைத்தியசாலையை விட்டு வெளியேறுகிறார்.

மற்றவர்களால் உடல் ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டவர்கள் உலகை விட்டு நீங்கிய வர்களாகவே வாழ்கிறார்கள். ராணிக்கும் அப்படித் தான்.  சாப்பாடு, தூக்கம் எல்லாவற்றையும் வெறுத்து வாழ்ந்தார்.

எல்லோரும் பழசை மறந்துவிடு என்கிறார்கள். அது சுலபம், சொல்பவர்களுக்கு மட்டும்.

தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகள் தினம் தினம் மனத்திரையில் ஓடும்போது அதை அழிப்பதென்பது இயலாமல்  போய்விடுகிறது.

வைத்தியசாலையிலிருந்து விடுபட்ட ராணிக்கு வாரா வாரம் பொலிஸ் நிலையத்துக்கு வந்து கையொப்பம் இடுமாறு உத்தரவு வருகின்றது. ஆனால் அந்தத் தினங்கள் கொடுமையின் உச்சங்கள்.

பொலிஸ் நிலையத்தில் வைத்து பாலியல் சித்திரவதைகள் தொடர்ந்தன. தலை முடியைப் பிடித்து இழுப்பார்கள், உடல் அங்கங்களை தொட்டழுத்துவார்கள். இதைத் தவிர்க்க ஒரு வழியுமில்லை. இயலாமல் தனது தகப்பனாரிடம் முறையிட, ஒன்றும் செய்யமுடியாத அவர் ராணியை பொலிஸ் நிலையம் செல்லாமல் நிறுத்தினார்.

தொடர்ந்து ராணியை கண்காணித்து வந்த இராணுவமும் பொலிசாரும் இதனால் கோபம் கொண்டு ஒரு நவம்பர் மாதம் ராணியின் தகப்பனரை கடத்திக் கொண்டு சென்றனர்.

அவரது ரத்தம் தோய்ந்த உடல் அதே நாள் கடற்கரையருகே கண்டுபிடிக்கப்பட்டது.

“எல்லாம் என்னால்தான் நடந்தது” – ராணி மீண்டும் அழுகிறார்.

“என்னால்தான் அவர் கொல்லப்பட்டார். அதன்பிறகு சாவதாக முடிவெடுத்து விஷம் சாப்பிட்டேன். ஆனால் சாவதற்குக்கூட கொடுத்துவைக்கவில்லை. நான் செத்திருந்தால் இப்போது எனது அம்மாவும் தங்கச்சியும் உயிருடன் இருந்திருப்பார்கள்.”

தகப்பனாரின் இறப்பைத் தொடர்ந்து ராணி மீண்டும் பொலிஸ் நிலையம் செல்லத் தொடங்கினார். ஆனால் அங்கே நடந்த பாலியற் கொடுமைகளை அவரால் தாங்க முடியவில்லை.

மே 2012ம் ஆண்டு தாயாரின் உதவியுடன் ராணி ஒரு ரகசிய இடத்தில் தங்கத் தொடங்கினார். மூன்று மாதங்களாக அவர் திருகோணமலையிலிருந்த அந்த ரகசிய வீட்டைவிட்டு வெளியே வரவேயில்லை.

ஆனால் இராணுவம் விட்டுவைக்கவில்லை. ராணியின் இருப்பிடத்தை தெரிவிக்காவிடில் தாயாராக் கொன்றுவிடுவதாக பயமுறுத்திவந்தனர்.

ஜூலை 8ம் திகதிதான் ராணியின் தாயார் அவருடன் கடைசியாக செல்பேசி மூலம் கதைத்தது. “வீட்டிற்கு வராதே” – என தாயார் வேண்டிக்கொண்டார்.

அதன் பின்னர் வந்த செல்பேசி அழைப்பு அவரது சின்னம்மாவிடமிருந்து.

வீட்டைக்கொழுத்தி விட்டார்கள். தாயும் தங்கச்சியும் உயிரோடு உள்ளே.

“நான் திரும்பிப் போனேன்” - ராணி சொல்கிறார். அவரது குரலில் ஒரு உணர்வுமில்லை.

அயலவர்கள் எரிந்த வீட்டைச் சுற்றி நின்றார்கள், மௌனமாக. ஒரு வெப்பம் கூடிய நாள். தீர்ந்த பெற்றோல் மணம் வீட்டைச்சுற்றி. யாரோவொருவர் ராணியை எரிந்து சாம்பலான வீட்டினுள்ளே கூட்டிச்சென்றார். இரண்டு எலும்புக் கூடுகள் சாம்பலுக்கு நடுவே. தனக்கு பரிச்சயமான ஒரு உடையின் ஒரு பாகம் எரிந்தும் எரியாமலும் தங்கச்சியின் அருகில். அவ்வளவு தான் ராணியின் நினைவில். ஆனால் அவ்வளவும் நிலையான நினைவாக.

இப்போது ஒளிந்திருப்பதற்கு ஒரு காரணமும் இருக்கவில்லை. எல்லாவற்றையும் இழந்தாயிற்று. தாய், தகப்பன், தம்பிகள், தங்கச்சி.

அயலாரும், கிராமத்தவர்களும் அவரை தப்பித்துச் செல்லுமாறு வலியுறுத்தினார்கள். ஆனால் ராணியின் மனம் மரத்துவிட்டது. அடுத்து வரும் கஷ்டம் இதுவரை பட்டதைவிட கொடுமையாக இருக்க முடியாதென ராணி நினைத்திருந்தார்.

அதுதான் அவர்விட்ட மிகப்பெரிய தவறு.

சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் சென்ற நவம்பர் மாதம் தொடக்கம் 47 நாட்கள் ராணி சேதலிக்கப்பட்டார். கூட்டம் கூட்டமாக சிங்கள இராணுவத்தால் தினமும் கற்பழிக்கப்பட்டார். சிகரட்டுகளால் அவரது உடல் முழுக்க சுடப்பட்டது. துடுப்பற்ற படகுபோல், திசையின்றி, திக்கின்றி ராணியின் உடலும் உள்ளமும் உடைந்து நொறுங்கியது. மனிதாபிமானம் கொண்ட ஒரு மனிதனைக்கூட அந்த 47 நாட்களில் ராணி எதிர்கொள்ளவில்லை என்பது மனித குலமே அவமானப்படக்கூடிய விடயம்.

ஒரு கடிகாரத்தின் முள்ளொலி மட்டும் கேட்டுக்கொண்டிருக்கும் இந்த சின்ன  அரையிருண்ட அறையில் அடுத்து என்ன நடந்தி ருக்கும் என நான் யோசித்துப் பார்க்கிறேன். அழுதழுத வேதனையிலும் களைப்பிலும் ராணியின் வார்த்தைகள் கோர்வைகளின்றி வந்து தடுமாறி விழுந்து மீண்டும் அவரது உடைந்து போன மனக்குவளைகளில் தேங்கிவிடுகின்றன.

ஒரு உறவினரால் கொடுக்கப்பட்ட லஞ்சப் பணம் ராணியை அரக்கரர்களின் பிடியிலிருந்து விடுவிக்கின்றது. மன்னார் மூலமாக படகில் ராணி அரக்கத்தனங்களிலிருந்து விடுபட்டுச் செல்கிறார். ஆனால் அந்த அரக்கர்களால் கொடுக்கப்பட்ட வடுக்கள் அவரது உடலை விட்டு விடுபட மறுக்கின்றன.

“என்னை லண்டனிலிருந்து திருப்பியனுப்பினால் நான் செத்துவிடுவேன்” -  உடலாலும் உள்ளத்தாலும் ஏமாற்றப்பட்ட ராணி சொல்கிறார்.

உற்சாகமற்ற பெப்ருவரி மாதத்தின் பனிமூடிய பகல்வெளிகள் ராணியை சமாதானப்படுத்த ஒரு வழியுமின்றி ஏங்கி நிற்கின்றன. பதுமராக மலர்க்கொத்தின் நீல நறுமணம் மட்டும் அறை யில் தங்கி நிற்கின்றது.

நோபல் பரிசு வென்ற அமெரிக்க எழுத்தாளர் எல்லி வீசல் பின்வருமாறு சொல்லியிருந்தார்.

“நான் எனது நினைவுகளை உயிருடன் வைத்திருக்க விரும்புகிறேன். நினைவுகளை மறப்பவர்கள் குற்றவாளிகள். அவர்கள் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு உடன் போனவர்கள்.”

இதைத்தான் நானும் செய்யவேண்டும்.

“மலர்களை மறக்கவேண்டாம்” - நான் சொல்லிவிட்டு மலர்க்கொத்தை எடுத்து ராணியிடம் அளிக்கிறேன். அதை அவர் மேலே தூக்கி நறுமணத்தை முகர எத்தனிக்கிறார்.

மலர்ந்து கொண்டிருக்கும் மொட்டுக்களின் நடுவே நான் ராணியின் கண்களைக் காண் கிறேன். அவை இப்போதும் அகன்று, இளமை யுடன், இலங்கையில் எம் இரண்டு பேருக்குமே பரிச்சயமான நீல நிற இறக்கைகள் கொண்ட இலைப்பறவைபோல தெரிகின்றன.

Thiratti.com Tamil Blog Aggregator

Wednesday, December 31, 2008

கஜினி (ஹிந்தி) – ஒரு பார்வை

நூறு மில்லியன் செலவலித்து எடுக்கப்படும் ஆங்கிலப் படங்களுக்கே பத்து டாலர்கள்தான் கட்டணம். ஆனால் கஜனிக்கு வாசலிலேயே பன்னிரண்டரை டாலர்கள் கறந்து விட்டார்கள். முன் வரிசையில் இருந்தவரைப் பார்க்க பாவமாக இருந்தது. குடும்பம், பிள்ளைகள் சகிதமாக கிட்டத்தட்ட பதினொரு பேர். பொரித்த சோளமும் (பாப் கோர்ன்) மெதுபானமும் உதிரியாக.

கஜனி தமித் திரைப்படத்தை அநேகம் பேர் பார்த்திருப்பீர்கள். அதனால் கதையை இங்கே விபரிப்பது அல்லது மறைப்பது டைட்டானிக் முடிவை சிதம்பர ரசகியமாக வைப்பது போலாகிவிடும்.

அமீர்கான், ‘நம்ம ஊரு’ அசின், ஜியா கான், வில்லனாக பிரதீப் ராவத், முருகதாஸ், ரவி கே. சந்திரன், ஏ. ஆர். ரஹ்மான் என ஒரு நட்சத்திரக் குழு அநேகப் பொருட்செலவில் மீள எடுத்திருக்கும் (remake) திரைப்படம் ஹிந்தி கஜினி.

தமிழிலிருந்து ஹிந்தியில் மீள எடுக்கப்பட்ட, விரல் விட்டு எண்ணத்தக்க திரைப்படங்களின் வரிசையில் கஜினி முதல் இடத்தை பெறும் எனலாம். ஆனால் தமிழ் கஜினியை பார்த்தவர்களுக்கு கடைசி அரை மணித்தியால திரைக்கதை, சம்பவங்களைத் தவிர மற்ற காட்சிகளெல்லாம் நிமிடத்துக்கு நிமிடம் ஒரே அமைப்பும் உணர்வும்தான், மொழியையும், நடிகர்களையும், இசையையும் தவிர.

‘நம்ம ஊரு’ அசின் ஹிந்திப் பதிப்பிலும் கலக்கியிருந்கிறார். இந்நாளைய நட்சத்திரங்களில் இளமை, அழகுடன் நடிப்பும் வரும் ஒரு நடியையென்றால் அசினைக் குறிப்பிடலாம்.

மிகவும் அனுபவம் மிக்க நடிகர் அமீர்கான். அவரது ஹிந்தித் திரைப்படங்கள் ஒரே குட்டைக்குள் நீந்தாத வித்தியாசமான வெளிப்பாடுகள். ஆனால் அவரது திரையுலக அனுபவத்தை தமிழில் பிரதம பாத்திரம் செய்த ‘நம்ம ஊரு’ சூர்யாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது பின் பாதியில்தான் அமீரின் மிளிர்ச்சியும் முதுமையும் வெளிப்படுகிறது. இதை இயக்குனரின் குறைபாடாக அல்லது படத்தொகுப்பின் (editing) பலவீனமாகக்கூட கருதலாம்.


கல்லூரி மாணவியாக வரும் ஜியா கான் மீண்டும் நடிப்புக் கல்லூரிக்கு போவது நன்று. அவரது அழகைப் இன்னும் பேரழகாகக் காட்டுவதிலேயே ஒப்பனைக்காரரும் அவரைச் சூழ்ந்தவர்களும் மெனக்கட்டதால், தேவையான நேரங்களில் காட்டப்படவேண்டிய உணர்ச்சிகள் முகப்ப+ச்சுக்குள்ளேயே மடங்கிக் கிடக்கின்றன. கண்களின் பாவனைகள்கூட ஏனோ தானென்று இருக்கின்றன. இதற்கிடை ஒரு கவர்ச்சி நடனம்வேறு.

வில்லன் தமிழில் அதே பாத்திரம் செய்த பிரதீப் ராவத், ஆனால் ஒற்றை வேடத்தில். தன்னை வெறுக்கும்படியாக நடித்ததில் அல்லது நடிக்கவைக்கப்பட்டதில் அவருக்கும் இயக்குனருக்கும் வெற்றிதான். முதல்பாதியில் பொலீஸ் அதிகாரியாக வருபவரே (பெயர் தெரியாது) தமிழிலும் ஹிந்தியிலும் நடித்திருக்கிறார். தமிழில் கொஞ்சம் விடைப்பாக இருந்த இவரது நடிப்பு ஹிந்தியில் அடக்கி வாசிக்கப்ட்டிருக்கிறது.

ஒளியமைப்பு அற்புதம். திரைக்கதைக்கு ஏற்றவாறு பகலும், இரவும் நிறைவான வெளிச்சமும், அளவான இருட்டுடனும் ஆஹா போட வைக்கின்றன. கடைசிக் காட்சியில் ஒடுங்கிய பாதைகளினூடே வேகமாக நகரும் காமரா நமது தலையைச் சுற்றவைக்காமல், வயிற்றைக் குழப்பாமல் தெளிவாக கதையில் மட்டும் ஒன்றி நிற்கிறது.

ரஹ்மானின் பாடல்கள் படம் விட்டு வெளியே வந்தவிடனும் மைனஸ் மூன்று பாகை குளிர் பனியில், கைவிரித்து, மீண்டும் மீண்டும் பாடத்துண்டுகின்றன. பின்னிசை தமிழ்ப் பதிவைத் தொட்டாலும் சில இடங்களில் அபாரம். இந்த பின்னிசையை அனுபவிக்க நல்ல ஒலி அமைப்புள்ள திரைப்பட அரங்குக்குத்தான் போகவேண்டும். அல்லது டி.வி.டி. வரும்வரை காத்திருங்கள். “காமராக் கொப்பியில்” பார்த்தல் திரைப்படத்துக்கும் உங்கள் ரசனைக்கும் தீங்கு விளைப்பதுவாகும்.

முன் பந்திகளில் எழுதியதுபோல் கடைசிக் காட்சிகள் மாற்றியமைக்கப் பட்டிருக்கின்றன. வில்லனின் இரட்டை வேடக் குளறுபடிகள் கிடையாது. கல்லூரி வளாகத்தில் நூறு மாணவிகள் முன்பு வில்லன்களைப் பந்தாடும் காட்சிகளும் இல்லை. ஒரு காதலியை இளந்தவனின், மனநிலை பாதிக்கப்பட்டவனின் ஆக்ரோஷம் அதே வெடிப்புடன் காட்டப்பட்டிருக்கிறது.

என்னதான் அமீர்கான் படமாக இருந்தாலும் முருகதாஸ_க்குத்தான் முதுகில் தட்டவேண்டும். தனக்குக் கிடைக்கப்பட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் கஜினியில் இருந்த சின்னச் சின்ன ஓட்டைகளை அடைத்து தெளிவாக மீண்டும் ஹிந்தியில் கதை சொல்லியிருந்கிறார்.

ஆனால் அமீர்கான் படங்களிலெல்லாம் மிளிரும் ஒரு “கடைசிக் கட்ட” குறைபாடு இங்கும் தெரிகிறது. ஒரு இருண்ட கதை (dark subject) ஒரு கனமான காட்சியில் முடிவதுதான் பார்வையாளர்களை கனத்த மனதுடன் வீடு செல்லவைக்கும். அந்தக் கதையுடன், ‘ஏன் அப்படி?’ என்ற கேள்வியுடன் அவர்கள் சில நாட்கள் வாழ்வார்கள். இப்படிப்பட்ட திரைப்படங்களை மகிழ்வான (காதாநாயகன் ஓகே என்ற மாதிரி) காட்சிகளுடன் முடிப்பது, நாம், இடைவேளையின்றி, இருந்து பார்த்த மூன்று மணித்தியாலங்களை வீணடித்து, சப்பென்றாக்கிவிடுகிறது.

இத்தரப்பட்ட முடிவுதான் அமீர்கானின் அநேக படங்களின் வழமை. அல்லது பாலிவ+ட்டின் superstition ஆகக்கூட இருக்கலாம்.

Sunday, December 21, 2008

கிருஷ்ணா – முடி வெட்டுங்கோ!

அண்மையில் கனடாவிலிருந்து வெளிவரும் நாஷனல் போஸ்ட் பத்திரிகையில் வெளிவந்திருந்த பேட்டியொன்று புலம் பெயர்ந்த ஈழத் தமிழரிடையே சிறு சலனத்தை ஏற்படுத்தியிருந்தது. தனது வழமையான, தமிழரைக் குறைவாகக் காட்டும் பாணியைக் கைவிட்டுவிட்டு, நாஷனல் போஸ்ட் பத்திரிகை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான திரு. புpரபாகரனின் மூத்த சகோதரியை பேட்டி கண்டிருந்தார்கள்.

இந்தப் பேட்டியின் நோக்கம் திரு. பிரபாகரனது இளமைக்காலப் போக்குகளையும் அவரது விடுதலைப் போராட்ட உணர்வின் வளர்ச்சியையும் கண்டறிவதாக இருந்தாலும், பேட்டியின் நடை, ஓரளவான அனுதாபப் போக்கு மற்றும் கடைசியில் திரு. பிரபாகரனை போருக்குச் செல்லும் மனம் சஞ்சலப்பட்ட அர்ஜூனனாக சித்தரித்திருந்தமை ஒரு வித்தியாசத்தை கொடுத்திருந்தது.

ஆனால் அர்ஜூனன், கிருஷ்ண பரமாத்மாவின் கட்டளைப்படிதான் போருக்குச் சென்றான் என்று போஸ்ட் தெரிவித்திருந்தமை தவறாகும். கீதோபதேசம் உதிர்ந்ததே மகாபராதத்தில் வரும் அர்ஜூனன் - கிருஷ்ண பரமாத்மா போர்க்கள உரையாடலின் மூலம்தான். மாவீரன் அர்ஜூனன் மனக் குழப்பம் அடைந்திருந்தான். தனது சகோதரர்களுடனே போரிடுவதா, அது சரிதானா, போரைத் தவிர்ப்பதெப்படி என்பதே அவனது குழப்பம். இந்தக் குழப்பத்தைத் தீர்க்கத்தான் கிருஷ்ண பரமாத்மா கீதையை உபதேசித்தார்.

பெரும்பான்மையான நல்ல மனிதர்களுக்கு நன்மை ஏற்பட வேண்டுமென்றால், தீயவர்களான சகோதரர்களைக்கூட அழிப்பது தவறல்ல என்பது கிருஷ்ண பரமாத்மாவின் உபதேசம்.
இந்தத் தருணத்தில்தான் எனது உத்தியோகப+ர்வ முடி திருத்துனர் இடையில் வருகிறார். அவரது பெயர்கூட கிருஷ்ணா. நிறம்கூட பரமாத்மாவைப் போல் கொஞ்சம் கறுப்பு. ஆனால் குறுந்தாடி வைத்திருந்தார். ‘ஜெல்’ போட்ட தலைமுடியை மேவி வாரி, ஒரு வெள்ளைக் கோட்டுடன், நிமிர்ந்த நோக்குடன், கையில் வெளிரும் கத்திரியுடன் ஒரு டாக்டருக்கான மிடுக்குடன் மிளிர்ந்திருந்தார் எனது முடி திருத்துனர்.

ரொரன்ரோ மாநகரில் முடி திருத்துனர் கல்லூரிக்குச் சென்று டிப்ளோமா பட்டம் பெற்றுள்ள கிருஷ்ணா, முடி திருத்துனர் பரம்பரையில் வந்தவரல்ல. இந்த வலையை வாசிப்பவர் எல்லோருக்கும் தமிழர் சாதி ஏற்ற இறக்கங்களைப் பற்றி நிறையத் தெரிந்திருக்கும். தமிழர் சாதி வழமைப்படி முடி திருத்துனர்கள் ‘சுத்தமற்ற’ தொகுதியில் அடங்குகிறார்கள். இதை நான் சொல்லவில்லை. பண்டைய வழக்கங்களைப் பற்றிய ஆராய்ச்சி சொல்கிறது:
http://www.tamilnation.org/caste/caste_and_observances.htm

ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் கிருஷ்ணா அர்ஜூனனாக மாறியிருந்தார். ஊர் நியமப்படி உயர் சாதியில் பிறந்தவர்கள் ஏன் மாற்றுச் சாதிக்கென ஒதுக்கப்பட்ட தொழில்களைச் செய்யமுடியாது? மேற்கத்திய நாடுகளில் வாழும் நாங்கள் இன்னமும் மூட நம்பிக்கைகள் கூடிய ஊர் வழமைகளைப் பின்பற்றுவதா? ஒரு தொழிலில் திறமையும் ஆவலும் உள்ளவர்கள் அதைப் பின்பற்றி ஏன் வாழ்வை, வியாபாரத்தை, எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளக் கூடாது?

நீண்ட நாள் குழப்பத்தின் பின்னர், தனது குடும்பத்தினரின் ‘உயர் சாதி’ எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டு, முடி திருத்துனராக மாறியவர்தான் கிருஷ்ணா. கடந்த இரண்டு வருடமாக ஒரு தலைக்கு பன்னிரண்டு டாலரென, இவரது கத்தரி இடைய+ரின்றி வெட்டிக் கொண்டிருக்கிறது. தனக்கு இந்தத் தொழிலின் கத்தரிச் சத்தமும், வாடிக்கையாளருடன் அளவளாவும் சந்தர்ப்பங்களும் மிகவும் அiமைதியான சங்கீதம் மாதிரி இருக்கிறதென சொல்லும் கிருஷ்ணா, ஒரு நாள் கவிஞராக மாறினாலும் ஆச்சரியப்பட முடியாது.

மகாபாரதத்தில் வரும் கீதோபதேசத் தருணத்தில் நான் இப்போது முடி திருத்துனர் கிருஷ்ணாவை அர்ஜூனனின் இடத்தில் அமர்த்திப் பார்க்கிறேன். எல்லோருக்கும் வாழ்வில் ஒரு போர் காத்திருக்கிறது, கேள்விகளுடன், சந்தேகங்களுடன், சஞ்சலங்களுடன். ஆனால் எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் விடை கிடைத்துவிடாது, எதிர்பார்க்கவும் கூடாது.

கேள்விகளிலேயே ஆழ்ந்து கிடப்பவன் அந்தக் ஆழ்ந்த குழியிலிருந்து மீள முடியாது. அந்தந்த தருணத்தில் கிடைக்கும் தகவல்களையும் விடைகளையும் கொண்டு முடிவெடுப்பவன்தான் சிறந்த தலைவன்.

முடி திருத்துனர் கிருஷ்ணா முடிவெடுத்துவிட்டார். தற்போது தன்னம்பிக்கையுடன் திருமுடி எடுத்துக்கொண்டிருக்கிறார்.


Thiratti.com Tamil Blog Aggregator

பொம்மலாட்டம் - விமர்சனம்

ஒரு நல்ல திரைக் கதையை முன்னூறு பேர் முன்னிலையில் கொல்வதற்கு பாரதிராஜா ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். தப்பு, தப்பு.. இந்தக் கொடுமையை காண்பித்த ரொரன்ரோ திரையரங்கில் இருந்தவரோ நாற்பது பேர்தான்.

சினிமாவைப் பின்னணியில் கொண்ட கதை. ஒரு கர்வமிக்க கோபக்கார டைரக்டர் (பாரதிராஜாவின் தற்றுருவகமோ?), இவரை வர்ஷிக்கும் ஒரு பெண் கவிஞர், டைரக்டர் தயவில் ஒரு இளம் நாயகி, அந்த இளம் நாயகியை ‘மடக்க’ முனையும் அனைவரும் கொல்லப்படுகிறார்கள். கடைசியில் சிலிர்க்க வைக்கக்கூடய ஒரு திருப்பம்.

ஆனால் சிலிர்ப்பேயின்றி திரையோட்டம் முழுக்க சப்பென்றிருக்கிறது.

பாரதிராஜா இன்னும் பழைய உத்தியில் வண்ண நிறக் குடைகள், பெரீய வெள்ளைக் கார், குதிரைகள், சம்பந்தமில்லாத காட்சித் தொகுப்புகள் (editing) சகிதம் ‘நிறம் மாறாத பூக்கள்’ ஸ்டைலில் ஆடுகிறார் பொம்மலாட்டம். அர்ஜூன், நானா பட்டேகர் என திரையுலக பிரபலங்கள் இருந்தும் கதையை பார்வையாளரிடையே ஒட்டவைக்க முடியவில்லை.

முதல் தவறு: ஒரு ‘திரில்லர்’ கதையை பட்ட பகல் காட்சிகளின் மூலம் காட்டியமை. இதே கதையை இரவுக் காட்சிகளில் (சிகப்பு ரோஜாக்கள் போல) எடுத்திருந்தால் கதைக்குள்ளே இலகுவாக பார்வையாளரை கொண்டு சென்றிருக்க முடியும்.


இரண்டாவது தவறு: காலத்துக்கேற்ப கதையைப் பின்னாதது. கைரேகை அடையாளம், டி.என்.ஏ போன்று forensic science வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் இன்னமும் பழைய பாணியிலேயே, அதுவம் சி.பி.ஐயை புலன் விசாரிக்கவிட்டது நகைப்பானது. அத்தோடு பொதுவாக நகர, மாநில, அரசியல் அளவில் விசாரணைகளுக்கு தடங்கல் இருக்குமென்று கருதினால்தான் கொலை வழக்குகள் சி.பி.ஐ கையுக்குச் செல்லும். இக் கதையில் அப்படி ஒரு நிகழ்வும் காட்டப்படவில்லை. அர்ஜூனை சாதரண கான்ஸடபிளாக காட்டியிருந்தாலே போதுமான கைதட்டு விழுந்திருக்கும்.

சினிமா சூட்டிங்கில் இடைபெறும் தடைய+ருகள், கஷ்டங்கள், நாயகிகளுக்கு ‘டூஸ்ரா’ போடும் இளசுகள், முதிர்வுகள் பற்றி நன்றாக சொல்லப்பட்டிருக்கின்றன. மற்றும்படி ‘நீங்களும் ஒருமுறை பாருங்கோ’ என்று சொல்வதற்கு ஏதுமில்லை.

நல்ல திரைக்கதை (எங்கு சுட்டதோ தெரியாது). ஆனால் எனக்குத் தெரிந்த சென்னைத் தமிழில் சொல்வதானால் “கைமாலம் பண்ணீட்டாங்க!”

இன்னும் எண்பதுகளிலேய வாழும் பாரதிராஜாவை யாராவது இழுத்து வந்து புதிய தமிழ்த் திரைப்படங்களை போட்டுக் காட்டுங்கய்யா!

Friday, December 19, 2008

தமிழ்த் திரைப்படங்களில் ‘ரகசிய நற்செய்தி’

ஆங்கிலத்தில் இதை ‘ஹிடின் மெஸேஜ்’ என்று கூறுவார்கள். ஒரு பொருளை விளம்பரப்படுத்தவோ, இயக்குனர் அல்லது தயாரிப்பாளரது அரசியல், சமூக கண்ணோட்டத்தை பிரபலப்படுத்தவோ ‘முகத்தில் அடிக்காதவாறு’ சில ரகசிய செய்திகள் கதையோடு பின்னப்பட்டு வெளிப்படும்.

கதாநாயகன் ‘கொக்கா கோலா’ குடிப்பது, ஒரு ‘பிராண்ட் நேம்’ கை மணிக்கூடு அணிவது அல்லது கதையின் போக்கில் சிசு அழிப்பை, தற்றினச் சேர்க்கையை ஒரு கதாபாத்திரம் எதிர்ப்பது என இவ் ரகசிய செய்திகள் விதம் விதமாக அடங்கும்.

எம்.ஜி.ஆர். படங்களின் பொதுப்பட்ட தொனியை இவ்வாறு எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அவரது படங்கள் கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரச்சார வாகனம். ஒரு குறிப்பிட்ட செய்தியை, கொள்கையை எதிர்பார்த்தும்தான் அவரது ரசிகர்கள் திரையரங்குகளுக்குச் செல்கிறார்கள். இந்த விதத்தில் ரஜனி ரசிகர்களைவிட குழம்பிப் போனவர்கள் யாருமில்லை. அவர் ‘வருவாரா மாட்டாரா’ என்பதிலேயே இருபது வருடங்கள் கடந்து விட்டன. இனி வந்துதான் என்ன பிரயோசனம்?

சின்னக் கலைவாணர் விவேக்கின் அப்பட்டமான கருத்து வெளிப்பாடுகள், முன்னர் குறிப்பட்டதுபோல் அப்பட்டமானவை. முகத்தில் அடிக்கும் அறிவுரை ரகம். நாசூக்கான வெளிப்பாடுகள அல்ல.

சமீபத்தில் நான் பார்த்த ஒரு தமிழ்த் திரைப்படம் இந்த ‘ரகசிய செய்தியை’ நல்ல நோக்குக்காக பயன்படுத்தியிருக்கிறது.

“மகேஷ், சரண்யா, மற்றும் பலர்..” என்ற திரைப்படம் ஆஸ்கார் தரம் கொண்டதல்ல. ஆனால் திரைக்கதையை நகர்த்திய விதம், முதலில் காட்டிய காட்சிகளின் காரணங்களை வித்தியாசமாக பின் பாதியில் விளக்கிய முறை, கடைசிவரை ‘என்ன ஆச்சு’ என்ற கேள்வியை கதாபாத்திரங்களையும் பார்வையாளர்களையும் மனதில் தவிக்கவிட்ட பாணி மெச்சத்தக்கது.


ஆனால் இதில் யாவற்றிலும் உயர்ந்தது இலை மறை காயாக காட்டப்பட்ட ஒரு வீதிப் பாதுகாப்புச் செய்தி (Road Safety Message).


மோட்டார் சைக்கிளில் செல்லும் கதாநாயகனுக்கு அவரது தாயிடமிருந்து ஒரு ‘செல்’ அழைப்பு வருகிறது. கதாநாயகன் ஸ்டைலாக வண்டியோட்டியபடியே, தோளுக்கும் காதுக்கும் இடையே ‘செல்’லைச் செருகி அளவளாவுகிறார். பின்னர் யாரோ ஒருவரது விலாசம் தரப்பட அதைக்கூட வண்டியோட்டியபடியே குறித்துக்கொள்ள எத்தனிக்கிறார். பிறகு என்ன நடந்திருக்குமென்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆனால் இங்கே செய்தி என்னவென்றால், கதாநாயகனை ‘செல்’லில் அழைத்த தாயாருக்கு அவர் மோட்டார் சைக்கிளைச் செலுத்திக்கொண்டிருக்கிறார் என்பது தெரியும். கதாநாயகன்கூட ஒரு படித்த பொது அறிவுள்ள வாலிபன். அவன் பின்னே அமர்ந்து செல்லும் அவனது தங்கை ஒரு படித்த, திறமைகள் கொண்ட மங்கை. இந்த மூவரில் ஒருவர்கூட மோட்டார் சைக்கிள் செலுத்தும்போது ‘செல்’ தொலைபேசியில் பேசுவது தனக்கு மட்டுமல்ல, சுற்றிவர பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பயணிகளுக்கும் ஆபத்து என்பதை உணரவில்லை. விதியின் விளைவை மட்டுமே சந்தித்தார்கள்.

இந்தத் திரைப்படத்ததை பார்த்தவர்களுக்கு அப்பட்டமான அறிவுரை ஏதும் கூறப்படவில்லை. இந்தச் சம்பவத்தின் ‘ரசகிய செய்தியை’ கதாசிரியர் உணர்ந்துதான் அமைத்தாரா என்பதுகூட நமக்குத் தெரியாது. ஆனால் அறிவுரையின்றி மனதில் பதிந்து நீண்ட நாட்கள் நிற்கக்கூடியதாக ஒரு “வீதிப் பாதுகாப்புச் செய்தி” இலகுவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

நாசூக்காக சொல்லக்கூடிய இத்தரப்பட்ட செய்திகள் மக்களை உணர வைத்தால் நாட்டுக்கும் வீட்டிற்கும் நல்லது.