Sunday, December 21, 2008

கிருஷ்ணா – முடி வெட்டுங்கோ!

அண்மையில் கனடாவிலிருந்து வெளிவரும் நாஷனல் போஸ்ட் பத்திரிகையில் வெளிவந்திருந்த பேட்டியொன்று புலம் பெயர்ந்த ஈழத் தமிழரிடையே சிறு சலனத்தை ஏற்படுத்தியிருந்தது. தனது வழமையான, தமிழரைக் குறைவாகக் காட்டும் பாணியைக் கைவிட்டுவிட்டு, நாஷனல் போஸ்ட் பத்திரிகை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான திரு. புpரபாகரனின் மூத்த சகோதரியை பேட்டி கண்டிருந்தார்கள்.

இந்தப் பேட்டியின் நோக்கம் திரு. பிரபாகரனது இளமைக்காலப் போக்குகளையும் அவரது விடுதலைப் போராட்ட உணர்வின் வளர்ச்சியையும் கண்டறிவதாக இருந்தாலும், பேட்டியின் நடை, ஓரளவான அனுதாபப் போக்கு மற்றும் கடைசியில் திரு. பிரபாகரனை போருக்குச் செல்லும் மனம் சஞ்சலப்பட்ட அர்ஜூனனாக சித்தரித்திருந்தமை ஒரு வித்தியாசத்தை கொடுத்திருந்தது.

ஆனால் அர்ஜூனன், கிருஷ்ண பரமாத்மாவின் கட்டளைப்படிதான் போருக்குச் சென்றான் என்று போஸ்ட் தெரிவித்திருந்தமை தவறாகும். கீதோபதேசம் உதிர்ந்ததே மகாபராதத்தில் வரும் அர்ஜூனன் - கிருஷ்ண பரமாத்மா போர்க்கள உரையாடலின் மூலம்தான். மாவீரன் அர்ஜூனன் மனக் குழப்பம் அடைந்திருந்தான். தனது சகோதரர்களுடனே போரிடுவதா, அது சரிதானா, போரைத் தவிர்ப்பதெப்படி என்பதே அவனது குழப்பம். இந்தக் குழப்பத்தைத் தீர்க்கத்தான் கிருஷ்ண பரமாத்மா கீதையை உபதேசித்தார்.

பெரும்பான்மையான நல்ல மனிதர்களுக்கு நன்மை ஏற்பட வேண்டுமென்றால், தீயவர்களான சகோதரர்களைக்கூட அழிப்பது தவறல்ல என்பது கிருஷ்ண பரமாத்மாவின் உபதேசம்.
இந்தத் தருணத்தில்தான் எனது உத்தியோகப+ர்வ முடி திருத்துனர் இடையில் வருகிறார். அவரது பெயர்கூட கிருஷ்ணா. நிறம்கூட பரமாத்மாவைப் போல் கொஞ்சம் கறுப்பு. ஆனால் குறுந்தாடி வைத்திருந்தார். ‘ஜெல்’ போட்ட தலைமுடியை மேவி வாரி, ஒரு வெள்ளைக் கோட்டுடன், நிமிர்ந்த நோக்குடன், கையில் வெளிரும் கத்திரியுடன் ஒரு டாக்டருக்கான மிடுக்குடன் மிளிர்ந்திருந்தார் எனது முடி திருத்துனர்.

ரொரன்ரோ மாநகரில் முடி திருத்துனர் கல்லூரிக்குச் சென்று டிப்ளோமா பட்டம் பெற்றுள்ள கிருஷ்ணா, முடி திருத்துனர் பரம்பரையில் வந்தவரல்ல. இந்த வலையை வாசிப்பவர் எல்லோருக்கும் தமிழர் சாதி ஏற்ற இறக்கங்களைப் பற்றி நிறையத் தெரிந்திருக்கும். தமிழர் சாதி வழமைப்படி முடி திருத்துனர்கள் ‘சுத்தமற்ற’ தொகுதியில் அடங்குகிறார்கள். இதை நான் சொல்லவில்லை. பண்டைய வழக்கங்களைப் பற்றிய ஆராய்ச்சி சொல்கிறது:
http://www.tamilnation.org/caste/caste_and_observances.htm

ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் கிருஷ்ணா அர்ஜூனனாக மாறியிருந்தார். ஊர் நியமப்படி உயர் சாதியில் பிறந்தவர்கள் ஏன் மாற்றுச் சாதிக்கென ஒதுக்கப்பட்ட தொழில்களைச் செய்யமுடியாது? மேற்கத்திய நாடுகளில் வாழும் நாங்கள் இன்னமும் மூட நம்பிக்கைகள் கூடிய ஊர் வழமைகளைப் பின்பற்றுவதா? ஒரு தொழிலில் திறமையும் ஆவலும் உள்ளவர்கள் அதைப் பின்பற்றி ஏன் வாழ்வை, வியாபாரத்தை, எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளக் கூடாது?

நீண்ட நாள் குழப்பத்தின் பின்னர், தனது குடும்பத்தினரின் ‘உயர் சாதி’ எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டு, முடி திருத்துனராக மாறியவர்தான் கிருஷ்ணா. கடந்த இரண்டு வருடமாக ஒரு தலைக்கு பன்னிரண்டு டாலரென, இவரது கத்தரி இடைய+ரின்றி வெட்டிக் கொண்டிருக்கிறது. தனக்கு இந்தத் தொழிலின் கத்தரிச் சத்தமும், வாடிக்கையாளருடன் அளவளாவும் சந்தர்ப்பங்களும் மிகவும் அiமைதியான சங்கீதம் மாதிரி இருக்கிறதென சொல்லும் கிருஷ்ணா, ஒரு நாள் கவிஞராக மாறினாலும் ஆச்சரியப்பட முடியாது.

மகாபாரதத்தில் வரும் கீதோபதேசத் தருணத்தில் நான் இப்போது முடி திருத்துனர் கிருஷ்ணாவை அர்ஜூனனின் இடத்தில் அமர்த்திப் பார்க்கிறேன். எல்லோருக்கும் வாழ்வில் ஒரு போர் காத்திருக்கிறது, கேள்விகளுடன், சந்தேகங்களுடன், சஞ்சலங்களுடன். ஆனால் எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் விடை கிடைத்துவிடாது, எதிர்பார்க்கவும் கூடாது.

கேள்விகளிலேயே ஆழ்ந்து கிடப்பவன் அந்தக் ஆழ்ந்த குழியிலிருந்து மீள முடியாது. அந்தந்த தருணத்தில் கிடைக்கும் தகவல்களையும் விடைகளையும் கொண்டு முடிவெடுப்பவன்தான் சிறந்த தலைவன்.

முடி திருத்துனர் கிருஷ்ணா முடிவெடுத்துவிட்டார். தற்போது தன்னம்பிக்கையுடன் திருமுடி எடுத்துக்கொண்டிருக்கிறார்.


Thiratti.com Tamil Blog Aggregator

1 comment:

சு.செந்தில் குமரன் said...

read, www.susenthilkumaran.blogspot.com if u can

Post a Comment