Wednesday, December 31, 2008

கஜினி (ஹிந்தி) – ஒரு பார்வை

நூறு மில்லியன் செலவலித்து எடுக்கப்படும் ஆங்கிலப் படங்களுக்கே பத்து டாலர்கள்தான் கட்டணம். ஆனால் கஜனிக்கு வாசலிலேயே பன்னிரண்டரை டாலர்கள் கறந்து விட்டார்கள். முன் வரிசையில் இருந்தவரைப் பார்க்க பாவமாக இருந்தது. குடும்பம், பிள்ளைகள் சகிதமாக கிட்டத்தட்ட பதினொரு பேர். பொரித்த சோளமும் (பாப் கோர்ன்) மெதுபானமும் உதிரியாக.

கஜனி தமித் திரைப்படத்தை அநேகம் பேர் பார்த்திருப்பீர்கள். அதனால் கதையை இங்கே விபரிப்பது அல்லது மறைப்பது டைட்டானிக் முடிவை சிதம்பர ரசகியமாக வைப்பது போலாகிவிடும்.

அமீர்கான், ‘நம்ம ஊரு’ அசின், ஜியா கான், வில்லனாக பிரதீப் ராவத், முருகதாஸ், ரவி கே. சந்திரன், ஏ. ஆர். ரஹ்மான் என ஒரு நட்சத்திரக் குழு அநேகப் பொருட்செலவில் மீள எடுத்திருக்கும் (remake) திரைப்படம் ஹிந்தி கஜினி.

தமிழிலிருந்து ஹிந்தியில் மீள எடுக்கப்பட்ட, விரல் விட்டு எண்ணத்தக்க திரைப்படங்களின் வரிசையில் கஜினி முதல் இடத்தை பெறும் எனலாம். ஆனால் தமிழ் கஜினியை பார்த்தவர்களுக்கு கடைசி அரை மணித்தியால திரைக்கதை, சம்பவங்களைத் தவிர மற்ற காட்சிகளெல்லாம் நிமிடத்துக்கு நிமிடம் ஒரே அமைப்பும் உணர்வும்தான், மொழியையும், நடிகர்களையும், இசையையும் தவிர.

‘நம்ம ஊரு’ அசின் ஹிந்திப் பதிப்பிலும் கலக்கியிருந்கிறார். இந்நாளைய நட்சத்திரங்களில் இளமை, அழகுடன் நடிப்பும் வரும் ஒரு நடியையென்றால் அசினைக் குறிப்பிடலாம்.

மிகவும் அனுபவம் மிக்க நடிகர் அமீர்கான். அவரது ஹிந்தித் திரைப்படங்கள் ஒரே குட்டைக்குள் நீந்தாத வித்தியாசமான வெளிப்பாடுகள். ஆனால் அவரது திரையுலக அனுபவத்தை தமிழில் பிரதம பாத்திரம் செய்த ‘நம்ம ஊரு’ சூர்யாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது பின் பாதியில்தான் அமீரின் மிளிர்ச்சியும் முதுமையும் வெளிப்படுகிறது. இதை இயக்குனரின் குறைபாடாக அல்லது படத்தொகுப்பின் (editing) பலவீனமாகக்கூட கருதலாம்.


கல்லூரி மாணவியாக வரும் ஜியா கான் மீண்டும் நடிப்புக் கல்லூரிக்கு போவது நன்று. அவரது அழகைப் இன்னும் பேரழகாகக் காட்டுவதிலேயே ஒப்பனைக்காரரும் அவரைச் சூழ்ந்தவர்களும் மெனக்கட்டதால், தேவையான நேரங்களில் காட்டப்படவேண்டிய உணர்ச்சிகள் முகப்ப+ச்சுக்குள்ளேயே மடங்கிக் கிடக்கின்றன. கண்களின் பாவனைகள்கூட ஏனோ தானென்று இருக்கின்றன. இதற்கிடை ஒரு கவர்ச்சி நடனம்வேறு.

வில்லன் தமிழில் அதே பாத்திரம் செய்த பிரதீப் ராவத், ஆனால் ஒற்றை வேடத்தில். தன்னை வெறுக்கும்படியாக நடித்ததில் அல்லது நடிக்கவைக்கப்பட்டதில் அவருக்கும் இயக்குனருக்கும் வெற்றிதான். முதல்பாதியில் பொலீஸ் அதிகாரியாக வருபவரே (பெயர் தெரியாது) தமிழிலும் ஹிந்தியிலும் நடித்திருக்கிறார். தமிழில் கொஞ்சம் விடைப்பாக இருந்த இவரது நடிப்பு ஹிந்தியில் அடக்கி வாசிக்கப்ட்டிருக்கிறது.

ஒளியமைப்பு அற்புதம். திரைக்கதைக்கு ஏற்றவாறு பகலும், இரவும் நிறைவான வெளிச்சமும், அளவான இருட்டுடனும் ஆஹா போட வைக்கின்றன. கடைசிக் காட்சியில் ஒடுங்கிய பாதைகளினூடே வேகமாக நகரும் காமரா நமது தலையைச் சுற்றவைக்காமல், வயிற்றைக் குழப்பாமல் தெளிவாக கதையில் மட்டும் ஒன்றி நிற்கிறது.

ரஹ்மானின் பாடல்கள் படம் விட்டு வெளியே வந்தவிடனும் மைனஸ் மூன்று பாகை குளிர் பனியில், கைவிரித்து, மீண்டும் மீண்டும் பாடத்துண்டுகின்றன. பின்னிசை தமிழ்ப் பதிவைத் தொட்டாலும் சில இடங்களில் அபாரம். இந்த பின்னிசையை அனுபவிக்க நல்ல ஒலி அமைப்புள்ள திரைப்பட அரங்குக்குத்தான் போகவேண்டும். அல்லது டி.வி.டி. வரும்வரை காத்திருங்கள். “காமராக் கொப்பியில்” பார்த்தல் திரைப்படத்துக்கும் உங்கள் ரசனைக்கும் தீங்கு விளைப்பதுவாகும்.

முன் பந்திகளில் எழுதியதுபோல் கடைசிக் காட்சிகள் மாற்றியமைக்கப் பட்டிருக்கின்றன. வில்லனின் இரட்டை வேடக் குளறுபடிகள் கிடையாது. கல்லூரி வளாகத்தில் நூறு மாணவிகள் முன்பு வில்லன்களைப் பந்தாடும் காட்சிகளும் இல்லை. ஒரு காதலியை இளந்தவனின், மனநிலை பாதிக்கப்பட்டவனின் ஆக்ரோஷம் அதே வெடிப்புடன் காட்டப்பட்டிருக்கிறது.

என்னதான் அமீர்கான் படமாக இருந்தாலும் முருகதாஸ_க்குத்தான் முதுகில் தட்டவேண்டும். தனக்குக் கிடைக்கப்பட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் கஜினியில் இருந்த சின்னச் சின்ன ஓட்டைகளை அடைத்து தெளிவாக மீண்டும் ஹிந்தியில் கதை சொல்லியிருந்கிறார்.

ஆனால் அமீர்கான் படங்களிலெல்லாம் மிளிரும் ஒரு “கடைசிக் கட்ட” குறைபாடு இங்கும் தெரிகிறது. ஒரு இருண்ட கதை (dark subject) ஒரு கனமான காட்சியில் முடிவதுதான் பார்வையாளர்களை கனத்த மனதுடன் வீடு செல்லவைக்கும். அந்தக் கதையுடன், ‘ஏன் அப்படி?’ என்ற கேள்வியுடன் அவர்கள் சில நாட்கள் வாழ்வார்கள். இப்படிப்பட்ட திரைப்படங்களை மகிழ்வான (காதாநாயகன் ஓகே என்ற மாதிரி) காட்சிகளுடன் முடிப்பது, நாம், இடைவேளையின்றி, இருந்து பார்த்த மூன்று மணித்தியாலங்களை வீணடித்து, சப்பென்றாக்கிவிடுகிறது.

இத்தரப்பட்ட முடிவுதான் அமீர்கானின் அநேக படங்களின் வழமை. அல்லது பாலிவ+ட்டின் superstition ஆகக்கூட இருக்கலாம்.

4 comments:

வண்ணத்துபூச்சியார் said...

ரசிப்பு தன்மை உள்ளவர்களுக்கு உலகம் எப்போதும் சந்தோஷமே என்பார் என் குரு ஒஷோ...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சினிமா பற்றிய எனது வலை பாருங்கள்.

நிறை / குறை சொல்லுங்கள்..

வாழ்த்துக்கள்.


சூர்யா

butterflysurya.blogspot.com

துளசி கோபால் said...

போலீஸ் அதிகாரியாக வருபவர் ரியாஸ்கான்.

எல்லாம் சுபம்ன்னு முடிக்கணுமுன்னு பிரார்த்தனை இருக்கும்:-)

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment