Friday, December 19, 2008

தமிழ்த் திரைப்படங்களில் ‘ரகசிய நற்செய்தி’

ஆங்கிலத்தில் இதை ‘ஹிடின் மெஸேஜ்’ என்று கூறுவார்கள். ஒரு பொருளை விளம்பரப்படுத்தவோ, இயக்குனர் அல்லது தயாரிப்பாளரது அரசியல், சமூக கண்ணோட்டத்தை பிரபலப்படுத்தவோ ‘முகத்தில் அடிக்காதவாறு’ சில ரகசிய செய்திகள் கதையோடு பின்னப்பட்டு வெளிப்படும்.

கதாநாயகன் ‘கொக்கா கோலா’ குடிப்பது, ஒரு ‘பிராண்ட் நேம்’ கை மணிக்கூடு அணிவது அல்லது கதையின் போக்கில் சிசு அழிப்பை, தற்றினச் சேர்க்கையை ஒரு கதாபாத்திரம் எதிர்ப்பது என இவ் ரகசிய செய்திகள் விதம் விதமாக அடங்கும்.

எம்.ஜி.ஆர். படங்களின் பொதுப்பட்ட தொனியை இவ்வாறு எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அவரது படங்கள் கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரச்சார வாகனம். ஒரு குறிப்பிட்ட செய்தியை, கொள்கையை எதிர்பார்த்தும்தான் அவரது ரசிகர்கள் திரையரங்குகளுக்குச் செல்கிறார்கள். இந்த விதத்தில் ரஜனி ரசிகர்களைவிட குழம்பிப் போனவர்கள் யாருமில்லை. அவர் ‘வருவாரா மாட்டாரா’ என்பதிலேயே இருபது வருடங்கள் கடந்து விட்டன. இனி வந்துதான் என்ன பிரயோசனம்?

சின்னக் கலைவாணர் விவேக்கின் அப்பட்டமான கருத்து வெளிப்பாடுகள், முன்னர் குறிப்பட்டதுபோல் அப்பட்டமானவை. முகத்தில் அடிக்கும் அறிவுரை ரகம். நாசூக்கான வெளிப்பாடுகள அல்ல.

சமீபத்தில் நான் பார்த்த ஒரு தமிழ்த் திரைப்படம் இந்த ‘ரகசிய செய்தியை’ நல்ல நோக்குக்காக பயன்படுத்தியிருக்கிறது.

“மகேஷ், சரண்யா, மற்றும் பலர்..” என்ற திரைப்படம் ஆஸ்கார் தரம் கொண்டதல்ல. ஆனால் திரைக்கதையை நகர்த்திய விதம், முதலில் காட்டிய காட்சிகளின் காரணங்களை வித்தியாசமாக பின் பாதியில் விளக்கிய முறை, கடைசிவரை ‘என்ன ஆச்சு’ என்ற கேள்வியை கதாபாத்திரங்களையும் பார்வையாளர்களையும் மனதில் தவிக்கவிட்ட பாணி மெச்சத்தக்கது.


ஆனால் இதில் யாவற்றிலும் உயர்ந்தது இலை மறை காயாக காட்டப்பட்ட ஒரு வீதிப் பாதுகாப்புச் செய்தி (Road Safety Message).


மோட்டார் சைக்கிளில் செல்லும் கதாநாயகனுக்கு அவரது தாயிடமிருந்து ஒரு ‘செல்’ அழைப்பு வருகிறது. கதாநாயகன் ஸ்டைலாக வண்டியோட்டியபடியே, தோளுக்கும் காதுக்கும் இடையே ‘செல்’லைச் செருகி அளவளாவுகிறார். பின்னர் யாரோ ஒருவரது விலாசம் தரப்பட அதைக்கூட வண்டியோட்டியபடியே குறித்துக்கொள்ள எத்தனிக்கிறார். பிறகு என்ன நடந்திருக்குமென்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆனால் இங்கே செய்தி என்னவென்றால், கதாநாயகனை ‘செல்’லில் அழைத்த தாயாருக்கு அவர் மோட்டார் சைக்கிளைச் செலுத்திக்கொண்டிருக்கிறார் என்பது தெரியும். கதாநாயகன்கூட ஒரு படித்த பொது அறிவுள்ள வாலிபன். அவன் பின்னே அமர்ந்து செல்லும் அவனது தங்கை ஒரு படித்த, திறமைகள் கொண்ட மங்கை. இந்த மூவரில் ஒருவர்கூட மோட்டார் சைக்கிள் செலுத்தும்போது ‘செல்’ தொலைபேசியில் பேசுவது தனக்கு மட்டுமல்ல, சுற்றிவர பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பயணிகளுக்கும் ஆபத்து என்பதை உணரவில்லை. விதியின் விளைவை மட்டுமே சந்தித்தார்கள்.

இந்தத் திரைப்படத்ததை பார்த்தவர்களுக்கு அப்பட்டமான அறிவுரை ஏதும் கூறப்படவில்லை. இந்தச் சம்பவத்தின் ‘ரசகிய செய்தியை’ கதாசிரியர் உணர்ந்துதான் அமைத்தாரா என்பதுகூட நமக்குத் தெரியாது. ஆனால் அறிவுரையின்றி மனதில் பதிந்து நீண்ட நாட்கள் நிற்கக்கூடியதாக ஒரு “வீதிப் பாதுகாப்புச் செய்தி” இலகுவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

நாசூக்காக சொல்லக்கூடிய இத்தரப்பட்ட செய்திகள் மக்களை உணர வைத்தால் நாட்டுக்கும் வீட்டிற்கும் நல்லது.No comments:

Post a Comment