Sunday, December 21, 2008

பொம்மலாட்டம் - விமர்சனம்

ஒரு நல்ல திரைக் கதையை முன்னூறு பேர் முன்னிலையில் கொல்வதற்கு பாரதிராஜா ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். தப்பு, தப்பு.. இந்தக் கொடுமையை காண்பித்த ரொரன்ரோ திரையரங்கில் இருந்தவரோ நாற்பது பேர்தான்.

சினிமாவைப் பின்னணியில் கொண்ட கதை. ஒரு கர்வமிக்க கோபக்கார டைரக்டர் (பாரதிராஜாவின் தற்றுருவகமோ?), இவரை வர்ஷிக்கும் ஒரு பெண் கவிஞர், டைரக்டர் தயவில் ஒரு இளம் நாயகி, அந்த இளம் நாயகியை ‘மடக்க’ முனையும் அனைவரும் கொல்லப்படுகிறார்கள். கடைசியில் சிலிர்க்க வைக்கக்கூடய ஒரு திருப்பம்.

ஆனால் சிலிர்ப்பேயின்றி திரையோட்டம் முழுக்க சப்பென்றிருக்கிறது.

பாரதிராஜா இன்னும் பழைய உத்தியில் வண்ண நிறக் குடைகள், பெரீய வெள்ளைக் கார், குதிரைகள், சம்பந்தமில்லாத காட்சித் தொகுப்புகள் (editing) சகிதம் ‘நிறம் மாறாத பூக்கள்’ ஸ்டைலில் ஆடுகிறார் பொம்மலாட்டம். அர்ஜூன், நானா பட்டேகர் என திரையுலக பிரபலங்கள் இருந்தும் கதையை பார்வையாளரிடையே ஒட்டவைக்க முடியவில்லை.

முதல் தவறு: ஒரு ‘திரில்லர்’ கதையை பட்ட பகல் காட்சிகளின் மூலம் காட்டியமை. இதே கதையை இரவுக் காட்சிகளில் (சிகப்பு ரோஜாக்கள் போல) எடுத்திருந்தால் கதைக்குள்ளே இலகுவாக பார்வையாளரை கொண்டு சென்றிருக்க முடியும்.


இரண்டாவது தவறு: காலத்துக்கேற்ப கதையைப் பின்னாதது. கைரேகை அடையாளம், டி.என்.ஏ போன்று forensic science வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் இன்னமும் பழைய பாணியிலேயே, அதுவம் சி.பி.ஐயை புலன் விசாரிக்கவிட்டது நகைப்பானது. அத்தோடு பொதுவாக நகர, மாநில, அரசியல் அளவில் விசாரணைகளுக்கு தடங்கல் இருக்குமென்று கருதினால்தான் கொலை வழக்குகள் சி.பி.ஐ கையுக்குச் செல்லும். இக் கதையில் அப்படி ஒரு நிகழ்வும் காட்டப்படவில்லை. அர்ஜூனை சாதரண கான்ஸடபிளாக காட்டியிருந்தாலே போதுமான கைதட்டு விழுந்திருக்கும்.

சினிமா சூட்டிங்கில் இடைபெறும் தடைய+ருகள், கஷ்டங்கள், நாயகிகளுக்கு ‘டூஸ்ரா’ போடும் இளசுகள், முதிர்வுகள் பற்றி நன்றாக சொல்லப்பட்டிருக்கின்றன. மற்றும்படி ‘நீங்களும் ஒருமுறை பாருங்கோ’ என்று சொல்வதற்கு ஏதுமில்லை.

நல்ல திரைக்கதை (எங்கு சுட்டதோ தெரியாது). ஆனால் எனக்குத் தெரிந்த சென்னைத் தமிழில் சொல்வதானால் “கைமாலம் பண்ணீட்டாங்க!”

இன்னும் எண்பதுகளிலேய வாழும் பாரதிராஜாவை யாராவது இழுத்து வந்து புதிய தமிழ்த் திரைப்படங்களை போட்டுக் காட்டுங்கய்யா!

2 comments:

Muruganandan M.K. said...

நல்ல காலம் நான் இன்னும் பார்க்கவில்லை. பாரக்கப் போவதுமில்லை. விமர்சனத்திற்கு நன்றி. காலத்தோடு கைகோர்த்து நடக்காவிட்டால் இப்படித்தானாகும் போல்.

குப்பன்.யாஹூ said...

நிறைய விமர்சகர்கள் படம் நல்லா இருக்கிறது என்று எழுதி உள்ளீர்கள். உங்களின் விமர்சனம் ஆச்சரியமாக இருக்கிறது.

இருந்தாலும் பார்த்து விட வேண்டும் என்ற வெறியில் இருக்கிறேன்.

குப்பன்_யாஹூ

Post a Comment